பதிவு செய்த நாள்
13
ஜன
2023
01:01
பழநி கோவிலில் வரும், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகளுக்குட்பட்டு வேதமும், தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:: அரசு கொறடா கோவி செழியன்: திருவிடைமருதுார் தொகுதி, நாச்சியார் கோவில் பகுதியில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலுக்கு, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, திருப்பணி நடந்து வருகிறது. மூன்று மாதங்களுக்குள் பணி முடித்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
தி.மு.க., - கோவி செழியன்: அமைச்சருக்கு நன்றி. அக்கோவில் மடப்பள்ளியை, கான்கிரீட் கட்டடமாக மாற்றித்தர வேண்டும். அங்கு பயணியர் தங்கும் விடுதி கட்டித்தர வேண்டும். பழநி கோவில் கும்பாபிஷேகம், விரைவில் நடக்க உள்ளது. அக்கோவில் கும்பாபிஷேகம் தமிழில் நடக்குமா?
அமைச்சர் சேகர்பாபு: அவர் கோரியபடி பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட சாத்தியக்கூறுகள் இருந்தால், கட்டித் தரப்படும். பழநி கோவிலில், 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முழுக்க முழுக்க தமிழில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது. பழநி முருகன் கோவிலில், தமிழரின் பறைசாற்றும் வகையில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஓதுவாரை வைத்து, மந்திரங்கள் ஒலிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தி.மு.க., ஆட்சி வந்த பின், தேவாரமும், திருவாசகமும், அனைத்து கோவில்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பழநி கோவில் கும்பாபிஷேகத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்டு வேதமும் ஓதப்படும். தமிழ் மூல மந்திரமும் ஓதப்படும்.
கோவி செழியன்: கஞ்சனுார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அக்கோவிலில் இரண்டு தேர் இருந்தது. தற்போது தேரோட்டம் நடக்கவில்லை. தேரோட்டம் நடத்த வேண்டும். கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டும். விரைவில் மகாமக திருவிழா வர உள்ளது. நவ கிரி கோவில்களை புதுப்பித்து, மகாமகம் திருவிழா சிறப்பாக நடக்க, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: கஞ்சனுார் கோவில், 2006ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. போதிய நிதி ஒதுக்கப்பட்டு, கோவில் திருப்பணிகள் விரைவில் துவக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.