தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2023 10:01
சேதுக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை மன்னர் வளைகுடா கடலில் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர்.
சேதுக்கரை கடற்கரை வளாகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி, பித்ருக் கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து நடந்தது. வெண்ணை சாத்தப்பட்டு வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடலில் புனித நீராடிய பக்தர்கள் அருகே உள்ள தமிழ் மாமுனிவர் அகத்தியர், பிள்ளையார் கோயிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். கடற்கரை மற்றும் கோயில் வளாகங்களில் நின்றிருந்த பசுக்களுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி உள்ளிட்டவகைகளை வழங்கினர். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிறவல்லியம்மன் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் முன்னை மரத்திற்கு சிறப்பு ஹோமம் அபிஷேகம் ஆராதனை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. ஆத்ம தீபம் ஏற்றப்பட்டு உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்தினர் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.