ஆண்டிபட்டி: தை அமாவாசை விழாவில் மாவூற்று வேலப்பர் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நீராடி வேலைப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பதை பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதி, ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தை அமாவாசையை முன்னிட்டு நேற்று நடந்த நிகழ்ச்சியில் வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் மொட்டையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ் வசதி செய்திருந்தது ஏற்பாடுகளை ஹிந்து அறநிலைத்துறையினர் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி மேற்குத்ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், புனித நீர் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் தலைவர் வீரகுமார் தலைமையில் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.