பதிவு செய்த நாள்
27
ஜன
2023
03:01
அன்னூர்: காடுவெட்டிபாளையம், வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். காடுவெட்டி பாளையத்தில், பல நூறு ஆண்டுகள் பழமையான காராள வம்சத்தின், பொருள் தந்தான் குலத்தாரின் குலதெய்வமாக வீரமாத்தியம்மன் விளங்குகிறார். இங்கு புதிதாக கருங்கல்லினால், கர்ப்ப கிரகம், முன் மண்டபம், கல் தூண்கள், கோபுரம், பரிவார தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 24ம் தேதி கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. 25ம் தேதி காலை வேள்வி பூஜையும், பிரதிஷ்டை செய்தலும், இரவு 108 வகை திரவியங்களை யாக குண்டத்தில் சமர்ப்பித்தலும் நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு விமான கோபுரத்திற்கும், மூலவரான வீரமாத்தி அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சென்னிமலை, சுந்தர சென்னிகிரி பண்டித சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரம நிறுவனர் சிவாத்மா ஆகியோர் அருளுரை வழங்கினர். நான்கு கால யாக பூஜையிலும், தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டன. காடுவெட்டி பாளையம், நல்ல கவுண்டன் பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.