பதிவு செய்த நாள்
04
பிப்
2023
05:02
வடவள்ளி: கோவை, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா, கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச திருவிழா, கடந்த ஜனவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன., 29ம் தேதி முதல் பிப்., 3ம் தேதி வரை நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, கற்பக விருட்சம், அனந்தாசனம், கிருத்திகை, கேடயம், சந்திரபிரபை, ஆட்டுக்கிடாய், பூதவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர். தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளான இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோ பூஜை செய்து, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 4:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தங்க காசு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின், சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து, மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பகல், 12:20 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்தின் இடையே, தைப்பூச தேரோட்டம் நடந்தது. தைப்பூச தேர் திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள், மருதமலையில் குவிந்தனர். 575 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.