மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள ஆவுடை நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள ஆவுடைய நாயகி சமேத கைலாசநாதர் கோயில் மிகப்பழமை வாய்ந்ததாகும். இந்நிலையில் இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்ததையடுத்து வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன் கடந்த சில வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது.இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,அலங்காரம் செய்யப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சுவாமி வீதிவுலாவும் நடைபெற்றது.பின்னர் கோயில் முன்பாக அன்னதானமும், மாலை கோயிலில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் செய்திருந்தனர்.