பதிவு செய்த நாள்
12
மார்
2023
11:03
ப.வேலுார்: பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கிய நாட்டு பசுமாடுகள், தனிநபருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலரின் தன்னிச்சையான செயல், பக்தர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த பாண்டமங்கலத்தில், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவலில், தீராத உடல் நோய் குணமாக வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், நேர்த்திகடனாக நாட்டு பசு மாடுகளை வழங்குவது வழக்கம். இக்கோவிலில், மாடுகளை வளர்ப்பதற்காக, ‘கோ சாலை’ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாடுகளுக்கு தீவனமாக வைக்கோல் போர் வைப்பதற்கும் தனி இடம் உள்ளது. பக்தர்கள் வழங்கிய, ஐந்து நாட்டு பசு மாடுகள், ஒரு கன்று குட்டி பராமரிப்பில் இருந்து வந்தது. அந்த பசு மாடுகளை, பக்தர்கள் உதவியுடன், கோவில் நிர்வாகம் பராமரித்து வந்தது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலராக, செந்தில்குமார் என்பவர் சமீபத்தில் பொறுப்பேற்றார். பக்தர்கள் தானமாக வழங்கிய ஐந்து பசு மாடுகள், ஒரு கன்றுக்குட்டியை, தனி நபர்களுக்கு, செயல் அலுவலர் தன்னிச்சையாக தானமாக வழங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘கோவிலில், பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திகடனாக, பசுமாடுகளை தானமாக வழங்கி வருகின்றனர். கோவிலில் வளர்த்து வந்த பசு மாடுகளை, தனி நபர்களுக்கு செயல் அலுவலர் வழங்கி உள்ளார். தினமும் நடக்கும் கோமாதா பூஜைக்கு கூட பசுக்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: கோவிலில் இருந்த பசு மாடுகளை, கிராம பூசாரிகளுக்கு தானமாக கொடுத்துள்ளேன். இதற்குரிய ஆவணம் உள்ளது. இத்தகவலை, உயர் அதிகாரியிடம் தெரிவித்துவிட்டேன். இக்கோவிலில், காலம் காலமாக பசு மாடுகளை வளர்ப்பது குறித்து எனக்கு தெரியாது. மேலும், மாடுகளை வளர்ப்பதால் அன்னதான கூடம் அருகே துர்நாற்றம் வீசுகிறது. அதனால், ஐந்து பசுமாடுகள், ஒரு கன்று குட்டி என, அனைத்தையும் கோவிலில் இருந்து வெளியேற்றினேன். இவ்வாறு அவர் கூறினார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா கூறுகையில், ‘‘கோவிலுக்கு தானமாக வழங்கிய மாடுகளை, பூசாரிகளுக்கு தானமாக வழங்கலாம்; விற்பனை செய்யக்கூடாது. கோவில் செயல் அலுவலர், பாண்டு பத்திரம் எழுதி கையெழுத்துப் பெற்று, பூசாரிக்குத்தான் கொடுத்துள்ளார். இந்த மாடு கிடைக்காதவர்கள் தவறான தகவலை பரப்புகின்றனர்,’’ என்றார்.