பதிவு செய்த நாள்
15
மார்
2023
04:03
அன்னூர்: குப்பேபாளையம், மேட்டு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 17ம் தேதி நடக்கிறது. குப்பேபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமையான மேட்டு மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. போடி திம்மம்பாளையம், செம்பா கவுண்டன்புதூர், குப்பேபாளையம், கணபதிபாளையம், வடுகபாளையம், வரதையம் பாளையம், குரும்பபாளையம் ஆகிய ஏழு ஊர் மக்கள் ஒன்று கூடி கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்துள்ளனர். வரும் 16ம் தேதி மாலை தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வருதலும், திருவிளக்கு வழிபாடும், இரவு 7:45 மணிக்கு முதற்கால வேள்வி பூஜையும், இதையடுத்து விமான கலசங்கள் நிறுவுதலும் நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை 9 : 15 மணிக்கு, விமானங்களுக்கும், இதையடுத்து மூல மூர்த்தி களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது, விழாவில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகின்றனர். மகா தீபாராதனை நடக்கிறது. வேள்வி வழிபாடுகளை பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் செய்கின்றனர். மாலை 6:00 மணிக்கு சங்கமம் கலைக்குழுவின் பாரம்பரிய ஒயிலாட்ட அரங்கேற்றம் நடக்கிறது.