பதிவு செய்த நாள்
16
மார்
2023
11:03
மேட்டுப்பாளையம், : கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். மிகவும் பழமை வாய்ந்த கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் துவங்கின.
கல்காரப்பணிகள் கட்டுமான பணிகள் நடைபெறும் பொழுது, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தது. அதனால் ஒப்பந்ததாரர் தொடர்ந்து பணிகள் செய்ய முடியாமல் கைவிட்டார். இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில், நன்கொடையாளர்கள் வாயிலாக, ராஜகோபுரம் கட்ட அனுமதி வழங்க வேண்டி, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இது குறித்து வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறுகையில், ராஜகோபுர திருப்பணிகள் உபயதாரர்கள் வாயிலாக செய்யலாம் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏழு நிலை ராஜகோபுரம் கட்டி முடிக்க, 5 கோடியே, 30 லட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நல்ல நாள் பார்த்து ராஜகோபுர திருப்பணிகள் துவங்கப்படும், என்றார்.