பதிவு செய்த நாள்
17
செப்
2012
11:09
சேலம்: திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவுக்காக, சேலத்தில் இருந்து, மூன்று டன் பூக்கள் மாலைகளாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.சேலம், கொங்கணாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில், பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில், பூக்களை மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா, இன்று துவங்கி வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவுக்காக, சேலத்தில் இருந்து, மூன்று டன் பூக்களை மாலைகளாக தொடுத்து அனுப்பும் பணி நடந்தது.இது குறித்து டிரஸ்ட் நிர்வாகிகள் சந்திரசேகரன், ரமேஷ், கனகராஜ், சீனிவாசன், முத்தியாலு செட்டியார் ஆகியோர் கூறியதாவது:திருமலை திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அரளி, சாமந்தி, விருச்சிகா, மேரிகோல்டு, ஆஸ்டிரியா போன்ற பூக்கள் மாலைகளாக தொடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. பூக்களை, மாலைகளாக தொடுக்கும் பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். மூன்று டன் பூக்கள் மாலைகளாக தொடுத்து, அனுப்பப்படுகிறது. லாரிகள் மூலம் நாளை (இன்று) காலைக்குள் திருப்பதிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூக்களை அனுப்பும் போது, சிறப்பு பூஜை செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.