பதிவு செய்த நாள்
28
மார்
2023
04:03
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கற்பக விருட்ச வாகனம் வெள்ளோட்டம் நடைபெற்றது. அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்,கொங்கேழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்குகின்றது. இக்கோவிலில் உள்ள கற்பக விருட்ச வாகனம் பழுதடைந்த காரணத்தினால் கருணாம்பிகை அம்மன் டிரஸ்ட் சார்பில் இலுப்பை,அத்தி ஆகிய மரங்களினால் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கற்பக விருட்ச வாகனம் புதியதாக செய்யப்பட்டது. இதில் மயில், கிளி, அன்னப்பறவை உள்ளிட்ட பட்சியினங்களும் மற்றும் மாதுளை, வாழை, பலா, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட கனி வகைகளுடன் கூடிய கற்பக விருட்ச வாகனம்,கலைநயம் மிக்க அழகுற செய்யப்பட்டது. இதற்கு,பாலாலயம் மற்றும் வெள்ளோட்ட நிகழ்ச்சி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள்,அவிநாசி காமாட்சி தாச சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கருணாம்பிகை அம்மன் டிரஸ்ட் தலைவர் ராமசாமி, செயலாளர் குமரேசன், பொருளாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். புதியதாக செய்யப்பட்ட கற்பகவிருட்ச வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று நான்கு ரத வீதிகளில்,திரளாக கலந்து கொண்ட பக்தர்களால் சூழ வலம் வந்தது. இதுகுறித்து,கருணாம்பிகை அம்மன் டிரஸ்ட் தலைவர் ராமசாமி தெரிவித்த போது, கடந்த 33 வருடங்களாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் விழாவில் டிரஸ்ட் மூலம் கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் உற்சவ மூர்த்திகள் கற்பக விருட்ச வாகனத்தில் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பழைய வாகனம் பழுதடைந்த காரணத்தினால், தற்போது புதிய வாகனம் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.சித்திரை தேர் விழாவை முன்னிட்டு, ஏப்ரல் 30ம் தேதி உற்சவர் கற்பக விருட்ச வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது என கூறினார்.