பதிவு செய்த நாள்
28
மார்
2023
04:03
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேலை சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு காலசந்தி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பட்டி விநாயகர் கோவிலில் இருந்து புனித மண் எடுத்து வரப்பட்டு, கொடி மரத்திற்கு ரிஷப யாகம் நடந்தது. மூலவர் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் மற்றும் உற்சவ பஞ்ச மூர்த்திகள் ஆகியோருக்கு உச்சிக்கால பூஜையும், கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. பஞ்ச மூர்த்திகளுக்கு சோடஷோபசார தீபாராதனை நடந்தது. அதன்பின் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. மாலையில் யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்தல், வரும் ஏப்ரல் 2ம் தேதி நடக்கிறது.