மதுரை சித்திரைத் திருவிழா கூட்டம் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு * கமிஷனர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2023 10:04
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் கூடும் கூட்டத்தை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து ஒழுங்குப்படுத்தப்படும் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.
கடந்தாண்டு மதுரை சித்திரைத் திருவிழாவின்போது ஆற்றில் அழகர் இறங்கும் சமயத்தில் நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்தாண்டு அதுபோன்று நடக்கக்கூடாது என போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆலோசனை நடத்தினார்.
அவர் கூறுகையில், கடந்தாண்டு 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தாண்டு தேவைக்கேற்ப கூடுதலாக பயன்படுத்தப்படுவர். ட்ரோன்களில் ஸ்பீக்கர் கட்டி கூட்டம் ஒழுங்குப்படுத்தப்படும். ட்ரோன் மேப் மூலம் கூட்டம் கண்காணிக்கப்படும். இதற்கான தனியார் நிறுவனத்திடம் பேசி வருகிறோம். தவிர மக்களுக்கு உதவும் மையங்கள், டவர்கள் அமைக்கப்படும். நகரில் 1500 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அனைத்திற்கும் தனி எண்கள் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. 30 சதவீதம் கேமராக்கள் பழுதாகி இருந்தன. அவை சரிசெய்யப்பட்டு விட்டன. இன்னும் எங்கெங்கு வைக்கலாம் என ஆய்வு செய்து வருகிறோம், என்றார்.