திருக்கடையூர் கோவிலில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சஷ்டியப்த பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2023 11:04
மயிலாடுதுறை: சமத்தூர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், திருக்கடையூர் கோவிலில் சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சமத்தூர் ராம ஐயங்கார் உயர்நிலைப் பள்ளியில் 1977- 78 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. முடித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு வெள்ளி விழா மாணவர் பேரமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர். இவர்களில் பெரும்பாலானோர் நிலக்கிழார், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்த அமைப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடி தங்களது இளமை கால நினைவுகளை பகிர்ந்து கொள்வதுடன், தாங்கள் படித்த பள்ளிக்கும், அங்கு பயிலும் மாணவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பில் உள்ளவர்களுக்கு 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள அபிராமி சமய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு இன்று அதிகாலை வெள்ளி விழா மாணவர் பேரமைப்பு தலைவர் பால சண்முகானந்தன் தலைமையில் வந்தனர்.
தொடர்ந்து கோபூஜை, கஜபூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 160 கலசங்கள் வைக்கப்பட்டு, 10 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 45 பேர் சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் செய்தனர். அவர்களுக்கு கலசபிஷேகம் செய்யப்பட்டு, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல் மற்றும் ஆயுஷ் ஹோமம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் சுவாமி, அம்பாள் மற்றும் காலசம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பூஜைகளை ஹரி கிருஷ்ணா குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். கோவில் சார்பில் உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி பிரசாதங்களை வழங்கினார்.