பதிவு செய்த நாள்
25
செப்
2012
10:09
பவானி: பவானி, குண்டுசெட்டிபாளையத்தில் மழை வேண்டி, அங்குள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், கிராம மக்கள் ஒப்பாரி வைத்து பூஜை செய்தனர்.பவானி, சின்னப்புலியூர் கிராமம், குண்டுசெட்டிபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். முக்கியத் தொழில் விவசாயம். பருவமழை ஏமாற்றியதால், மழை வேண்டி பழங்கால வழக்கப்படி சிறப்பு பூஜை செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, ஊர் கொத்துக்காரர் சின்னசாமி தலைமையில், கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் முன் பெண்கள் திரண்டனர்.வீடுகள் தோறும் சென்று, உப்பு இல்லாமல் பழைய சோறு வாங்கி வந்து, கோவில் கொண்டு வந்து, அம்மனுக்கு படைத்த பின், பெண்கள் உண்டனர்.இந்த நிகழ்ச்சி, மூன்று நாட்களுக்கு முன் துவங்கியது. நான்காம் நாளான நேற்று முன்தினம் இரவு, ஒப்பாரி வைத்து, மழை வேண்டி பாட்டு பாடினர். கிராமத்தை சேர்ந்த ஏழு சிறுமியரை, கன்னிமாராக நினைத்து, அவர்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.