பதிவு செய்த நாள்
25
செப்
2012
10:09
ஊட்டி: குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகளை விரட்ட பட்டாசு வெடித்து, பயமுறுத்தி விரட்டும் நிலை ஒருபுறமிருக்க, கோவிலில் சிறப்பு பூஜை செய்து "தெய்வ சக்தியில் யானைகளை கட்டுப்படுத்த எப்பநாடு கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஊட்டி அருகே எப்பநாடு கிராமத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன; தேயிலை, வாழை மற்றும் மலைக் காய்கறி பயிராகும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. சில நாட்களாக எப்பநாடு அருகேயுள்ள வனப்பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட யானைகள், எப்பநாடு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டு, பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுக்க, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எப்பநாடு மக்கள் ஆணைகட்டி வனப்பகுதியில் உள்ள ஆணிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு, தங்களின் பாரம்பரிய உடையணிந்து, இசைக் கருவிகள் மீட்டு, ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்தனர். ஊர் தலைவர் லிங்கன் கூறுகையில், ""விவசாய நிலங்களில் யானைகள் சில நாட்களாக முகாமிட்டு, பயிர்களை சேதம் செய்கின்றன; யானைகளை விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டாலும், அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் உள்ளன. யானைகளிடம் இருந்து விவசாய நிலங்களை காப்பாற்றவும், யானைக்கும், யானைகளால் பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதை மையப்படுத்தி சிறப்பு பூஜை செய்கிறோம்; தெய்வ சக்திக்கு யானைகள் கட்டுப்பட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என நம்புகிறோம், என்றார்.