பதிவு செய்த நாள்
30
ஏப்
2023
10:04
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலத்தை, தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருப்பது, தணிக்கை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது.
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 355 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை, அறநிலையத் துறையினர் முறையாக பராமரித்து பாதுகாக்கவில்லை என, 2017- - 18ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாரதி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.
தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது: கோவிலுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் தனி நபர் பெயரிலும், மற்ற கோவில் பெயரிலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற, சட்டப் பிரிவு 78ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியும், செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், 41 கிராமங்களில் உள்ளன. அவற்றை கண்காணிக்க, புதிதாக ஜீப் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், செயல் அலுவலர் நிலங்களை பார்வையிடவில்லை; குத்தகை தொகையை வசூலிக்கவில்லை. காஞ்சி, காமராஜர் சாலையில், 24 ஆயிரத்து 462 சதுரடி கோவில் நிலம், பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டு களாக அவற்றை அகற்ற, கோவில் நிர்வாகம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. கோவிலில், 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட, 44 சிலைகள் பற்றிய விபரங்கள், தணிக்கைக்கு தாக்கல் செய்யப்படவில்லை. கோவிலின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், 1978ல் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதன்பின், நகைகள் சரிபார்க்கப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தங்க முலாம் பூசுவதில் மோசடி?: பெருந்தேவி தாயார் சன்னிதியை புதுப்பிக்க, 2010ல் அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்தது. அப்போது, சன்னிதி விமானத்திற்கு, ஐந்து உபயதாரர்கள் வாயிலாக, 60 கிலோ தங்கத்தில், 12.53 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு அடுக்குகளில், தங்க ரேக் அமைக்கும் பணி மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.ஆனால், உபயதாரர்கள் வாயிலாக, 1 கிலோ தங்கம் மட்டுமே, கோவிலுக்கு வழங்கப்பட்டது. எனவே, அந்த பணி ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, எலக்ட்ரோ பிளேட்டிங் முறையில், தங்க முலாம் பூசும் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. உபயதாரர் ஒருவரால், தாயார் சன்னிதி விமானத்திலும், தங்க முலாம் பூசி தகடுகள் மீண்டும் பொருத்தப்பட்டன.இப்பணிக்கு செலவிடப்பட்ட தங்கம், செம்பு விபரத்தை பதிவேட்டில் பதிவு செய்து, அதன் நகலை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும்; தங்க முலாம் பூசும் பணிகளை புகைப்படம் எடுக்க வேண்டும் என கமிஷனரின் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுஉள்ளன. ஆனால், அதை முறையாக தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.இது தொடர்பாக, அறநிலையத் துறை கமிஷனருக்கு, காஞ்சி புரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், 11ம் தேதி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார்.அதில், அவர் கூறியுள்ளதாவது:தாயார் சன்னிதியின் தங்க முலாம் பொலிவிழந்து வருகிறது. தங்க முலாம் பூசுவதற்கு எவ்வளவு தங்கம் பயன்படுத்தப்பட்டது என்ற விபரம் மறைக்கப்பட்டுள்ளது. இதில், பல கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது; ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.போட்டோ, வீடியோ போன் றவை எடுக்கவில்லை. வெளிப்படை தன்மையுடன், அனைவரும் அறியும் வகையில், தங்க விமானத்தை ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, விரிவான அறிக்கை அனுப்ப, காஞ்சிபுரம் இணை கமிஷனருக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், 13ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.