பரமக்குடியில் கள்ளழகரின் தசாவதார சேவை; விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 07:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பரமக்குடி சவுராஷ்ட்ரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் பெருமாள் கோயிலில் ஏப்., 30 காப்பு கட்டுடன் சித்திரை திருவிழா துவங்கி நடக்கிறது. மே 5 அதிகாலை 3:50 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அன்று காலை 10:00 மணி தொடங்கி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வண்டியூர் காக்கா தோப்பு பெருமாள் கோயிலில் இரவு 2:00 மணிக்கு சேர்க்கையானார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி அழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் இரவு முழுவதும் விடிய விடிய பெருமாள் அர்ச்ச அவதாரம், மச்ச, கூர்ம, வாமன, பரசுராம, ராம, கிருஷ்ண, மோகினி அவதாரங்களில் பக்தர்களுக்கு அருளினார். நேற்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகி அருள் பாலித்தார். இன்று ராஜாங்க திருக்கோலத்திலும், நாளை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்தில் திருக்கோவிலுக்குள் சேர்க்கையாக உள்ளார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.