ஹிந்து சமய அறநிலை துறை வழங்கும் ரூ.33 சம்பளம் பூசாரிகள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2023 05:05
கடலாடி: ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்குவதால் நாள் ஒன்றுக்கு ரூ. 33 சம்பளம் மட்டுமே கிடைப்பதாக பூசாரிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசு மற்றும் மண்டல தலைவர் கடலாடி சண்முகசுந்தரம் ஆகியோர் கூறியதாவது; ஹிந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாதம்தோறும் ஊக்க தொகையாக ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன்படி நாள் ஒன்றுக்கு ரூ. 33 ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த சொற்ப தொகையை கொண்டு யாரேனும் குடும்ப நடத்த முடியுமா என ஹிந்து சமய அறநிலையத்துறையினர் யோசிக்க வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கையை நம்பியே அர்ச்சகர்கள் பூசாரிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. குறைந்தபட்சம் குடும்பம் நடத்த தேவையான ஊக்கத்தொகை வழங்க வேண்டியது அவசியம். எனவே அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். வீட்டுமனை இல்லாத கிராம கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு தமிழக அரசு வீட்டுமனைகளை ஒதுக்கி வீடு கட்ட தேவையான நிதி உதவி செய்து தர வேண்டும் என கூறினர்.