நாம் இருவரும் இல்லை என்றால் பகவான்கிருஷ்ணரால் எதையும் செய்ய இயலாது என கருடனும், சக்கராயுதமும் நினைத்து கொண்டனர். இதை அறிந்த கிருஷ்ணர் தகுந்த பாடம் போதிக்க வேண்டும் என எண்ணினார். அப்போது காற்றில் கலந்து வந்த நறுமணம் அவரை கவர்ந்தது. அது குபேரனின் நந்தவனத்தில் பூத்திருக்கும் சவுகந்திகா மலரில் இருந்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டார். முதலில் கருடனை அழைத்து குபேரனின் நந்தவனத்தில் பூத்திருக்கும் அம்மலரை பறித்து வா என கட்டளையிட்டார். நந்தவனத்திற்கு வந்த கருடனை பார்த்து யார் என்ன செய்து கொண்டிருக்கிறீர் என காவல் காத்துக் கொண்டிருந்த அனுமன் கேட்டார். நான் தான் கருடன். பரமாத்மா தான் என்னை அனுப்பி இங்குள்ள மலர்களை பறித்து வரச் சொன்னார் என ஆர்ப்பாட்டம் செய்தது. எனக்கு பரமாத்மாவெல்லாம் தெரியாது. இங்கு மலர்களை பறிக்க அனுமதி கிடையாது என்றார் அனுமன். அவரிடம் சண்டைக்கு முயன்ற கருடனை பிடித்து தனது கை இடுக்கில் வைத்து கொண்டு வா உன்னை அனுப்பிய பரமாத்மாவிடமே போய் நியாயம் கேட்கலாம் என சொல்லிக்கொண்டே துாவாரகை நோக்கி வந்தார் அனுமன். அவர்களை பார்த்த மக்கள் அனைவரும் பயந்து சென்று கிருஷ்ணரிடம் விபரத்தை சொன்னார்கள். அவரும் அதை தெரியாதவர் போல கேட்டு குரங்கு முகமும் மனிதஉடலும் கொண்ட ஒருவன் கருடனை பிடித்துக் கொண்டு வருகிறானாம். அங்கு சென்று அவரை விடுவித்து வா என சக்கராயுதத்திடம் கட்டளையிட்டார். அதுவும் அனுமனை மிரட்டியது. எனக்கு தெரிந்த பரமாத்மா ராமபிரான் ஒருவரே. வேறு யாரையும் எனக்கு தெரியாது. நீயும் கிருஷ்ணருடைய ஆள் தானா என சொல்லிக் கொண்டே அவரையும் மற்றொரு கைஇடுக்கில் வைத்துக் கொண்டு நேராக கிருஷ்ணரிடமே வந்தார். கருடன், சக்கரமும் தன்னைவிட பலசாலி ஒருவர் உள்ளார் என்பதை அனுமன் பிடியால் அவதிப்பட்ட போது உணர்ந்தார்கள். இருவரிடம் இருந்த தலைக்கனமும் அகன்றது. கிருஷ்ணர் முன் சென்ற அனுமனுக்கு அங்கு இருப்பது யாரென்று தெரியவில்லை. அதற்கு மேல் சோதிக்க விரும்பாத கிருஷ்ணர் அவருக்கு ராமனாக காட்சி தந்தார்.