பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள பெருங்கரை ஆதி சக்தி ராஜராஜேஸ்வரி சக்தி பீடம் 15 ஆம் ஆண்டு பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் மே 15 காலை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கி, தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வந்தார். மே 22 மாலை 5:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. மேலும் காலை 6:00 மணி முதல் வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி பால்குடம், அக்னி சட்டி, காவடி எடுத்து பக்தர்கள் ராஜராஜேஸ்வரி, சந்தன மாரியம்மன் சக்தி பீடத்தை அடைந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகி விஜேந்திர சுவாமிகள் செய்திருந்தனர்.