ஊத்துக்கோட்டை: பவானியம்மனுக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா, தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பத்தாவது வாரத்தை ஒட்டி, அம்மனுக்கு அங்குள்ள தர்மராஜா கோவிலில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து அபிஷேகம் செய்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, அப்பகுதி மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தனர். இரவு பக்தர்கள் உடலில் வாயில் அலகு குத்தியும், சிலர் உடலில் அலகு குத்தி தொங்கியபடி வந்து வழிபட்டனர். பம்பை உடுக்கை, நாதஸ்வர மேளம், கரகாட்டத்துடன் அம்மன் மலர் அலங்காரத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, அங்குள்ள அரசு மேனிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.