எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் கோயிலில் சேர்க்கை: இன்று உற்சவ சாந்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 04:06
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில், கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் கோயிலை அடைந்தார். எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான இக்கோயிலில், 116 வது வைகாசி பவுர்ணமி விழாவில், ஜூன் 3 ல் துவங்கிய நடந்தது. ஜூன் 4 அதிகாலை வைகை ஆற்றில் எழுந்தருளிய பெருமாள், பல்வேறு மண்டகபடிகளில் தினமும் அருள் பணித்தார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு பூ பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வைகை ஆற்றில் இருந்து, எமனேஸ்வரம் வீதி முழுவதும் விடிய, விடிய உலா வந்தார். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் முன்பு எழுந்தருளிய பெருமாளுக்கு, கருப்பணசாமி சந்நதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயிலை அடைந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு கள்ளழகர் கண்ணாடி சேவையில் அருள் பாலித்தார். இன்று காலை 10:30 மணிக்கு உற்சவ சாந்தி திருமஞ்சனம் நடக்க உள்ளது. தொடர்ந்து நாளை இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்துள்ளனர்.