பதிவு செய்த நாள்
16
ஜூன்
2023
05:06
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் உள்ள தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையின் மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. சில நுாற்றாண்டுகளுக்கு முன், வேப்பமரத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மன், கோவிலில் வீற்றுள்ளார். இப்பகுதி பக்தர்கள், சிறிய கோவில் அமைத்து வழிபட்டனர். தற்போது, பக்தர்களின் வருகை அதிகரித்ததால், கோவில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து உள்ளது. துவக்கம் முதலே, அறங்காவலர்களே நிர்வகித்து வந்த நிலையில், தற்போது ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. அறநிலையத் துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், கோவிலை முற்றிலும் அகற்றி, கருவறை சன்னிதி, மஹா மண்டபம், முன் மண்டபம், திருக்குள சுற்றுச்சுவர் போன்றவற்றில் திருப்பணிகள் மேற்கொள்ள, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. துவக்கப் பணியாக, நன்கொடையாளர்கள் மூலம், 75 அடி நீளம், 31.75 அடி அகலம், 15.75 அடி உயரத்திற்கு, முன் மண்டபம் கட்டுமானப் பணி, 2015ல் துவக்கப்பட்டது. துாண்கள் மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில், பணிகள் சில நாட்களில் முடங்கிப் போனது. சில மாதங்களுக்கு பின், மீண்டும் துவங்கிய கட்டுமானப் பணி, மேல் தளத்துடன் முடங்கியது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, ஓராண்டிற்கு முன், மீண்டும் பணிகள் துவக்கப்பட்டன. கலையம்சங்களுடன் அமையும் துாண்களுடன், தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மண்டப முகப்பில் மாரி சின்னம்மன்; மண்டபத்தின் இருபுறமும் சமயபுரம் மாரியம்மன், பெரியபாளையத்தம்மன், வெக்காளியம்மன் என, ஒன்பது அம்மன்கள் சுதைச்சிற்பங்களாக அமைக்கப்படவுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.