திருமலை நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம்; பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2023 01:06
திருமலை திருப்பதி சீனிவாசப் பெருமாளை அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.
திருப்பதியில் இருந்து திருமலை வரையிலான மலைப்பாதையில் நடந்து சென்றும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.மலைப்பாதையில் அடர்ந்த வனமும் உண்டு, அங்கெல்லாம் காட்டு விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மலைப்பாதையில் நடந்து சென்ற குடும்பத்தில் இருந்த ஒரு சிறுவனை சிறுத்தைப் புலி ஒன்று தாக்கியது, உடனடியாக சிறுவனின் குடும்பத்தினர் உள்ளீட்ட பக்தர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தை புலி சிறுவனை விட்டுவிட்டு காட்டுக்குள் ஒடி மறைந்தது. சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறான். சம்பவம் நடந்த இடத்திற்கு கோவில் நிர்வாக அதிகாரி உள்ளீட்ட அனைத்து அதிகாரிகளும் முகாமிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒடிப்போன சிறுத்தை காளிகோவில் கோபுரம் மற்றும் லட்சுமி கோபுரம் ஆகிய பகுதிகளில் நடமாடியதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வழியாக இரவு 6 மணி வரையிலும்,அலிபிரி மலைப்பாதை வழியாக இரவு 10 மணிவரையிலும் மட்டுமே அனுமதிக்கப்படுவர், அதுவும் இருநுாறு பேர் கொண்ட குழுவாகவே அனுமதிக்கப்படுவர், குழுவாக செல்பவர்களும் ‘கோவிந்தா’ என்று கோஷமிட்டபடி செல்லும்படியும், குழந்தைகளை தனியாக விடவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.