காரமடை: காரமடை காமாட்சியம்மன் கோவிலில் ஆனி மாத திருமஞ்சனம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
காரமடை செங்குந்தர் பாவடி அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாத உத்தர நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. சோபக்கிருது வருடம் ஆனி மாத உத்திர திருமஞ்சன நாளான நேற்றுக்காலையில் விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், வேள்வி பூஜை, கலச ஆவாஹனம் முடிந்து மூலவர் காமாட்சி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகள் ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கற்பக விநாயகர் கோவிலில் இருந்து சீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் வேத பாராயணம் திரவிய ஹோமம், கணபதி ஹோமம் நடைபெற்று ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. சோடச உபசாரங்களுடன் மங்கள ஆரத்தி முடிந்து பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, வளையல்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம் ஆகிய மங்கள பொருட்கள் கொடுக்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை கல்யாணசுந்தரம் குருக்கள் குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாட்டை காமாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் திருக்கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.