பதிவு செய்த நாள்
27
ஜூன்
2023
01:06
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே மலையடிவாரத்தில் ரஷ்யா நாட்டினர் வழிபாடு நடத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, கதிர் நாயக்கன் பாளையம் அருகே கட்டப்பட உள்ள சுந்தரலிங்கேஸ்வரர், சுந்தரவல்லி கோவில் இடத்தில் ரஷ்ய நாட்டினர் வழிபாடு நடத்தினர். ரஷ்யாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள், வர்ம கலைஞர்கள், 15 பேர், கஜகஸ்தானை சேர்ந்த ஒருவர் என, 16 பேர் ரஷ்ய தமிழர் முருகதாஸ் தலைமையில் கடந்த, 14ம் தேதி சென்னை வந்தனர். இவர்கள் மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, அங்குள்ள கோவிலில் வழிபாடு நடத்தினர். நேற்று காரைக்காலை சேர்ந்த சித்தர் புத்தகயா தலைமையில் கோவை அருகே மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் கதிர் நாயக்கன்பாளையம் குருடி மலை அடிவாரத்தில் கட்டப்பட உள்ள சுந்தரலிங்கேஸ்வரர் கோயில் இடத்துக்கு வந்தனர். அவர்களை கோவில் நிர்வாகிகள் ரமேஷ், கனகராஜ், மோகன், தாமு மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர் சீனிவாசன் ரஷ்ய நாட்டினருக்கு விபூதி கொடுத்து, மாலை அணிவித்து வரவேற்றார். இது குறித்து, ரஷ்யா குழுவை சேர்ந்த முருகதாஸ் கூறுகையில்," உலகில் எங்கும் இல்லாத வகையில் கலாச்சாரம், பண்பாடு இந்தியாவில் தான் உள்ளது. அதை பார்ப்பதற்காகவும், சித்தா, வர்மா கலைகளின் பிறப்பிடமான இந்தியாவுக்கு வந்தோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்கள், சித்தர்கள் வாழ்ந்த ஆலயங்களுக்கு சென்று, வழிபாடு நடத்தினோம். வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என சித்தர்கள் வழிகாட்டி உள்ளனர். இதை ரஷ்ய நாட்டவரும் தெரிந்து கொள்ளவே இப்பயணத்தை மேற்கொண்டோம்" என்றார்.