பதிவு செய்த நாள்
29
ஜூன்
2023
02:06
செஞ்சி: பரதன்தாங்கல் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அடுத்த பரதன்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டி உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 27 ம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமமும், பகல் 1 மணிக்கு சாமி சிலைகள் கரிக்கோல ஊர்வலமும், மாலை 6 மணிக்கு பிரவேச பலி, கும்ப அலங்காரம், கடம் யாக சாலை பிரவேசமும், மாலை 7.30 மணிக்கு வேதபாராயணம், 9 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. 28 ம் தேதி மாலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், வேதபாராயணமும், இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. இன்று காலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாக சாலை பூஜையும், 108 விசேஷ திரவிய ஹோமமும், 9.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து யாத்ரா தானமும், 9.50 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும் நடந்தது. 10.30 மணிக்கு மகா மாரியம்மன், விநாயகர், முருகர், தாட்சாயணி, துர்க்கையம்மன், நவகிரகம், கங்கையம்மன், காத்தவராயனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.