காஞ்சி மஹாபெரியவரின் பக்தர்களில் ஒருவர் பேராசிரியர் முனைவர் மகாதேவன். ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் உயர்பதவியில் இருந்தார். சுவாமிகள் சென்னையில் முகாமிட்ட போதெல்லாம் அவரிடம் தத்துவம் பற்றி உரையாடுவது வழக்கம். இவர் ‘காஞ்சி முனிவர்’ என்னும் நுாலை ஆங்கிலத்தில் எழுதினார். பலரும் அதைப் படித்து மஹாபெரியவர் மீது ஈடுபாடு கொண்டனர்.
1961ல் கிரேக்க தலைநகர் ஏதென்சில் நடந்த தத்துவ அறிஞர்கள் மாநாட்டில் மகாதேவன் பங்கேற்றார். துறவிக்கான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றும் முனிவர் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக அங்கு அவர் தெரிவிக்க பலரும் சுவாமிகளை தரிசிக்க விரும்பினர். அதில் கிரேக்க ராணி பிரடரிக்கா, அவரது மகள் இளவரசி ஐரனி குறிப்பிடத்தக்கவர்கள். முதல் முறையாக ஆந்திராவிலுள்ள காளஹஸ்தியில் மஹாபெரியவரை அவர்கள் தரிசித்தனர். கிரேக்கம் பற்றிய விஷயங்களை விரிவாக சுவாமிகள் பேசியதை கேட்டு ராணி வியந்தார். அதன் பின்னர் தரிசனத்திற்காக மூன்று முறை இந்தியாவுக்கு வந்தார் ராணி. இதே போல இன்னொரு மறக்க முடியாத அனுபவம் ஒன்றும் மகாதேவனுக்கு ஏற்பட்டது. அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது. அதற்காக காஞ்சி மடத்திற்கு சென்ற போது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டு சால்வை வழங்கினார். காஞ்சி மஹாபெரியவர் வெள்ளை ஆடை ஒன்றை வழங்கினார். ஆடையைத் தொட்ட போது அது சொரசொரப்பாக இருப்பதை உணர்ந்தார் மகாதேவன். ‘காட்டுக்குச் சென்ற ராமர் ஒரு துறவி போல இப்படி மரப்பட்டையை ஆடையாக உடுத்தினார். நாட்டுக்குள் வாழ்ந்தாலும் நீயும் துறவி போல பற்றின்றி வாழ்வதால் உனக்கும் சொரசொரப்பான ஆடையையே கொடுத்தேன். தத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற உனக்கு மடத்தின் சார்பாக பட்டு சால்வையும் வழங்கினோம்’ என்றார் காஞ்சி மஹாபெரியவர். சுவாமிகளின் கருணை, அன்பை எண்ணி கண்ணீர் சிந்தினார் மகாதேவன்.