பதிவு செய்த நாள்
20
ஜூலை
2023
11:07
திருச்செந்துார்: திருச்செந்துாரில், மேலத்தெரு யாதவ சமுதாய மாரியம்மன் கோயில் கொடை விழாவும், சுடலைமாட சுவாமி கோயில் கால்நாட்டு விழாவும் நடந்தது. திருச்செந்துார், மேலத்தெரு, யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில்
கொடை விழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 16ம் தேதி இரவு அம்மனுக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. 17ம் தேதி பகலில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. 18ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் கும்பம் வீதி உலா வந்தது. மாலையில் திரளான பக்தர்கள், பால்குடம் எடுத்து நகர்பகுதி சுற்றி கோவிலுக்கு வந்தனர். பின்னர் இரவு 7:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 19ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணியளவில் மஞ்சள் நீராட்டு தீபாராதனையும், அம்மன் கும்பம் ஊரில் வலம் வரும் நிகழ்ச்சியும், மாலையில் நகர்பகுதியில் முளைப்பாரி ஊர்வலமாக வந்து, கடலில் பிரி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.
சுடலை மாடசுவாமி கோயில் : இதேபோல், மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி கோயில் கொடை விழா, வரும் 24ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை 3 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் 18ம் தேதி பகல் 11:45 மணியளவில் மாரியம்மன் கோயிலில் இருந்து திருக்கால், சுடலைமாட சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் சுடலைமாட சுவாமி கோயிலில் திருக்கால் நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, மேலத்தெரு யாதவ மகா சபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.