பதிவு செய்த நாள்
11
அக்
2012
03:10
வடநாட்டில், ராயசிங் பூபதி அரசாட்சி செய்து வந்தான். அவனுக்கு மதிநுட்பம் மிக்க அங்கபூபதி என்ற தம்பி இருந்தான். படை நிர்வாகம் தம்பியின் பொறுப்பில் இருந்தது. அங்கபூபதியின் மனைவி பக்தியில் சிறந்தவள். அவள் குருதேவர் ஒருவரிடம் உபதேசம் பெற்று ஹரி நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பாள். ஒருமுறை தன் குருநாதரை அரண்மனைக்கு அழைத்து வந்து குருபூஜை நடத்த கணவரிடம் அனுமதி கேட்டாள்.
அங்கபூபதிக்கு மனைவியின் பேச்சு பிடிக்கவில்லை. கணவனே தெய்வம் என்பது தான் குலமாதரின் லட்சணம். நீ யாரோ ஒருவனுக்கு பாதபூஜை செய்வதாகச் சொல்லி, பதிவிரதா தர்மத்தையே மீறுகிறாய், என்று கத்தினான். சுவாமி! நீங்களே என் தெய்வம். அதற்காக மகான்களை வணங்கக் கூடாது என்று சொல்கிறீர்களே! இது முறையா? என்று அழுதாள். ஆனால், அங்கபூபதி தனது நிலையில் விட்டுக்கொடுக்கவே இல்லை. கணவரின் போக்கால், அவளுக்கு உணவும், உறக்கமும் கூட பாரமானது. நீர் கூட அருந்தாமல் பூஜை அறையில் அமர்ந்து ஹரி நாமத்தை ஜெபித்தாள். திருமாலே! நீங்கள் தான் என் கணவருக்கு நல்லறிவைப் புகட்டி, குருபூஜை நடத்த உதவ வேண்டும், என்று உருக்கமாக வேண்டினாள்.
அன்றிரவில் மகாவிஷ்ணு, சங்கு சக்கர தாரியாக அங்கபூபதியின் கனவில் தோன்றினார். அங்கபூபதி! நான் சொல்வதைக் கேள். உன் மனைவி பதிவிரதை. உன்னையே எண்ணி உயிர் வாழ்பவள். அவளிடம் அன்பு காட்டுவது உன் கடமை! என்று கூறி மறைந்தார். கண்விழித்த பூபதி மனைவியிடம் ஓடினான். என் அன்பிற்குரியவளே! என்னை மன்னித்துவிடு, என்று அவள் கைகளைப் பற்றினான். அவள், பூபதியின் காலில் விழுந்து வணங்கினாள். திருமாலின் கிருபையால் தன் கணவனின் உள்ளம் மாறியதற்காக மகிழ்ந்தாள். துளசியும், தீர்த்தமும் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொண்டாள். அதன்பிறகு, பூபதியும், அவளும் விடியும் வரை பூஜை அறையில் அமர்ந்து. ஹரிநாமத்தை ஜெபித்தனர். பொழுது புலர்ந்ததும், மனைவியின் குருதேவரை அழைத்து வர. பூபதியே ஆள் அனுப்பினான். வரவேற்பு ஏற்பாட்டை கச்சிதமாக செய்து முடித்தான். அரண்மனை எங்கும் மாவிலைத் தோரணம். மேளதாளம் முழங்கியது. பல்லக்கில் குருதேவர் அழைத்து வரப்பட்டார். தன் மனைவியுடன் பூபதியும் இணைந்து குருதேவருக்கு பாத பூஜை செய்தான். குருதேவர் பூபதிக்கும் மந்திர உபதேசம் செய்தருளினார். அவர்கள் இருவரும் ஹரியின் கீர்த்தனங்களை ஆடியபடியே பாடி மகிழ்ந்தனர். மன்னன் ராயசிங், தம்பியின் மனமாற்றத்தை வெறுத்தான். அவனை திசை திருப்ப, பகைநாட்டின் மீது போர் தொடுக்கும்படி உத்தரவிட்டான்.
அண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல், படையுடன் புறப்பட்டான் பூபதி. அவனது வீரத்தைக் கண்ட எதிரி மன்னன் புறமுதுகிட்டு ஓடினான். அங்கிருந்த கருவூலத்தில், பொன், மணி, ரத்தினம், குதிரைகள், யானைகள் என்று செல்வத்தை வாரிக் கொண்டு நாடு திரும்பினான். கொண்டு வந்த செல்வத்தில் விலையுயர்ந்த வைர மாலை ஒன்றும் இருந்தது. அதை எடுத்த பூபதி, அண்ணா! விலை மதிப்புமிக்க இம்மாலையை கொண்டு வரும்போதே திருமாலுக்கு சமர்ப்பிக்க முடிவு செய்து விட்டேன். அதை எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள், என்றான். தம்பியின் பேச்சைக் கேட்ட ராயசிங் முகத்தில் கோபக்கனல் தெறித்தது.இது என்ன பிள்ளையில்லாத சொத்து என நினைத்து விட்டாயா? கோயிலுக்கு கொடுக்க வேறு ஏதாவது எடுத்துக் கொள், என்று கத்தினான். அண்ணா! என்னை மன்னித்துவிடுங்கள். வைரமாலை திருமாலுக்குத் தான், என்று அடம்பிடித்தான் பூபதி. இனியும், அவன் உயிரோடு இருந்தால், அரண்மனை சொத்தை பக்தி என்ற பெயரால் காலி செய்து விடுவான் என பயந்த ராயசிங், சூழ்ச்சி செய்து தம்பியைக் கொல்ல முடிவெடுத்தான். அன்றிரவில், தம்பியை அழைத்து சமாதானம் செய்வது போல் நடித்தான். தம்பி! அரண்மனை அலுவல்களால் நாம் சேர்ந்து சாப்பிட்டே பல காலமாகி விட்டது. வா! சாப்பிடலாம், என்றான். தம்பிக்குத் தெரியாமல் உணவில் விஷத்தைக் கலந்தான். நல்லவன் போல சேர்ந்தே அமர்ந்து கொண்டான். குருஉபதேசத்திற்குப் பின், அங்கபூபதி சாப்பாட்டை, திருமாலுக்கு அர்ப்பணம் செய்து அதன்பின் சாப்பிடுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லிவிட்டு உணவை எடுத்தான். பக்தியின் மகிமையால் அது விஷ உணவு என்பது தெரிந்து விட்டது. ஆனாலும், திருமாலுக்கு சமர்ப்பித்த உணவை பிரசாதமாக எண்ணி சாப்பிட்டான். அவனுக்கு ஏதும் ஆகவில்லை.
இதைக்கண்டு ராயசிங் கொதித்தான். கடும் விஷம் கலந்தும் இவன் மாளவில்லையே! என்ன செய்யலாம்? என யோசித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தச் சொத்துக்காகத்தானே அண்ணன் தன்னைக் கொல்லவே பார்க்கிறான் என்றெண்ணிய பூபதி, அரண்மனையை விட்டு மனைவியுடன் வெளியேறி விட்டான். இருவரும் பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு குதிரையில் புறப்பட்டனர். அவர்களது கையில், எதிரிநாட்டில் இருந்து பறித்து வந்த வைரமாலை மட்டும் இருந்தது. அதை ஜகந்நாதருக்கு அணிவித்து விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். விஷயமறிந்த ராயசிங், தம்பியிடம் இருக்கும் வைர மாலையை பறித்து வரும்படி வீரர்களை அனுப்பினான். வீரர்கள் பின் தொடர்வதை அறிந்த பூபதி, கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி ஆற்றுவெள்ளத்தில் மாலையை எறிந்து விட்டான். அந்த ஆறு பூரி வழியாகச் சென்றது. அதன் வெள்ளத்தில் வைரமாலையும் அடித்துச் செல்லப்பட்டது. கோயில் அர்ச்சகர் அபிஷேகத் தீர்த்தம் எடுக்கச் சென்ற போது, நதியோரத்தில் வைரமாலை மின்னுவதைக் கண்டார். அதை மூலவர் ஜகந்நாதருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
அன்றிரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய திருமால், வைரமாலையை தனக்கு செலுத்துவதாக நேர்ந்து கொண்ட பூபதியின் பக்தி திறத்தை தெரிவித்தார். அர்ச்சகர் மூலம் பூபதியின் புகழ் எங்கும் பரவியது. அவனது வரவை எதிர்பார்த்து ஜெகந்நாத ÷க்ஷத்திரமே காத்திருந்தது. யாத்திரையாக பூபதியும், அவரது மனைவியும் கோயில் வந்து சேர்ந்தனர். அனைவரும் அவரை வரவேற்று மகிழ்ந்தனர். இதற்கிடையில் ராயசிங்கும் கோயிலை வந்தடைந்தான். உண்மையை அறிந்த அவன், தம்பியிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அண்ணா! உங்களால் தான் இந்த எளியவன் இறையருளைப் பெற்றேன். உங்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பது தான் உண்மை, என்று அடக்கமாகத் தெரிவித்தான். அதன் பின் அண்ணனும், தம்பியும் பக்தியுடன் அறவழியில் ஆட்சி செய்தனர். இசைப்பூக்களால் பகவானை ஆராதித்தனர்.