பதிவு செய்த நாள்
28
செப்
2023
05:09
எதிரிகளை வீழ்த்த, உடல் நலன் பிரச்னை தீர வேண்டி, விஜயவாடா கனகதுர்கா கோவிலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பரிகார பூஜை செய்து வழிபட்டார். ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வளர்பிறை பிரதோஷமான நேற்று, சிறப்பு வழிபாடு செய்தார். சண்டி சிறப்பு யாகத்துடன் துர்க்கை அம்மனை வழிபட்ட அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலராக இருந்த பழனிசாமி, 2022ல், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். அ.தி.மு.க., பொதுச்செயலரானதும், அக்கோவிலுக்கு அன்னதானத்துக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், பண மாலை போட்டு வழிபட்டார். பொதுச்செயலராக பதவியேற்றதும் மதுரையில் கடந்த ஆக., 20ல், அ.தி.மு.க., மாநாட்டை நடத்தினார். மாநாட்டுக்கு முன் ஜூலை, 8ல் பஞ்சமி திதி நாளில் திருச்செந்துார் முருகனுக்கு சத்ரு சம்ஹார யாகம் நடத்தி வழிபட்டார். மாநாட்டுக்கு பின் ஆக., 30ல் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டார். கடந்த, 5ல் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், எதிரிகளை வென்று பில்லி, சூனியம் அகன்று, உடல் நலன் பெற வேண்டி நடத்தும், ‘சத்ரு சம்ஹார திரிசதி’ யாகத்தை நடத்தினார். அதில் அர்ச்சனை பூக்கள் வழங்கி, 300 முறை முருகன் பெயரை அர்ச்சனை செய்துள்ளார். தொடர்ந்து, 146 அடி உயர முருகன் சிலையின் வயிற்று பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்துவிட்டு கண் கலங்கிய நிலையில் வெளியே வந்தார். சில நாட்களாக உடல் நலத்தில் உள்ள பிரச்னைக்கு கோவில்களில் வழிபட்டு வருகிறார். இந்நிலையில் நம்நாட்டில் உள்ள, 51 சக்தி பீடங்களில் ஒன்றான, ஆந்திராவின் காவல் தெய்வமான, விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் வழிபட ஜோதிடர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மகிஷாசூரனை அழித்த சந்தோஷத்தில் தங்க மழை பொழிய செய்ததாக, இக்கோவில் வரலாறு கூறுகிறது. சிவனின் வலப்பகுதியில் அமர்ந்துள்ள அம்மன், இக்கோவிலில் இடப்பகுதியில் அமர்ந்துள்ளதோடு, 8 கைகளில் ஆயுதங்களுடன் உள்ளார். ஆதிசங்கர், இத்தலத்தில் அம்மனுக்கு முன், ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். உடல் நலன், எதிரிகளை வீழ்த்த, இங்கு சண்டி யாகம் நடத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நேற்று வளர்பிறை பிரதோஷம், புதன்கிழமை, சதய நட்சத்திர நாளில் வந்துள்ளது. இந்நாளில் இங்குள்ள கனக துர்காவை வழிபட்டால் வேண்டும் வரம் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தடைகள் அகல, வெற்றிகள் கிடைக்க, உடல் நலன் பிரச்னை தீர வேண்டி கனகதுர்காவை மனமுருகி பழனிசாமி வேண்டியுள்ளார். இங்கு வழிபட்ட பின் மனம் மகிழ்ச்சியாக உள்ளதாக, கட்சியினரிடம் கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.