பதிவு செய்த நாள்
21
அக்
2023
06:10
சென்னிமலை; சென்னிமலை மலை கோவில் குறித்து, சர்ச்சையாக பேசிய, வெள்ளகோவிலை சேர்ந்த பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடி காடு என்ற இடத்தில், கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்தது. இதற்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சென்னிமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ முன்னணி அமைப்பினர், ‘சென்னிமலை மலைக் கோவிலை, கல்வாரி மலையாக மாற்றுவோம்’ என பேசியது பெரும் சர்ச்சையானது. இவர்களை கைது செய்யக்கோரி, ஹிந்து முன்னணி சார்பில், சென்னிமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செங்கல்பட்டை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி ஜோசப் (எ) சரவணன், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய ஸ்டீபன் என்பவரை, சென்னிமலை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், மேட்டுப்பாளையம், சடையப்பா நகரை சேர்ந்த ஜோசப் மகன் ஸ்டீபன், 40; என்பவரை, சென்னிமலை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் அம்மாபேட்டை, அரியாம்பள்ளத்தில் கிறிஸ்துநாதர் ஆலயத்தில், பாதிரியாராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.