பதிவு செய்த நாள்
18
அக்
2012
12:10
கிருஷ்ணர் அருள்புரியும் திருத்தலமான மதுராவில் திரிபுரதாசர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். இயல்பிலேயே அவரது மனம் கிருஷ்ணபக்தியில் லயித்திருந்தது. எப்போதும் கடவுளின் அருள்விளையாடல்களில் ஈடுபட்டு வந்தார். பஜனை பாடல்களைப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். கல்வியறிவும் பெற்றிருந்தார். கல்வி, கேள்விகளில் சிறந்த தாசரைப் பற்றி அறிந்த மதுராவை ஆண்ட மன்னன், அவரை அமைச்சராக நியமித்தான். ஆனால், அவர் அந்தப்பதவியை விரும்பவில்லை. மன்னா! அரசபதவி வேப்பங்காயாகக் கசக்கிறது. இந்தப் பதவியில் இருப்பவன் போர் சிந்தனையிலேயே இருக்க வேண்டியுள்ளது. பகவானுக்கு கைங்கர்யம் செய்வதை விரும்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன், என்று கூறினார். அமைச்சரின் எண்ணத்தை அறிந்த மன்னன், பக்தர் ஒருவர் தன்னிடம் பணியாற்றியதை எண்ணி மகிழ்ந்தான். தாசருக்கு நிறைய பொன்னும் பொருளும் வாரி வழங்கினான். ஆனால், பொருளாசை அற்ற தாசர், அதை ஏழைகளுக்கும், கோயில் திருப்பணிக்கும் செலவிட்டார். ஒரு நல்லநாளில் இல்லத்தில் பஜனை நடத்தி, அடியார்களுக்கு அன்னதானம் செய்தார்.
மனைவியை அழைத்துக் கொண்டு யாத்திரை கிளம்பினார். பக்திப்பாடல்களைப் பாடியபடியே நடந்தார். அவர்கள் பிருந்தாவனத்தை அடைந்தனர். அங்குள்ள கோயில் கோபுரத்தைக் கண்டதும், தாசரின் மனதில் பக்தி பெருக்கெடுத்தது. பிருந்தாவன கிருஷ்ணரைத் தரிசித்த பின், வேறு எந்த திருத்தலத்திற்கும் செல்ல அவருக்கு மனமில்லை. அங்கேயே தங்கி, கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினர். சிறுகுடில் அமைத்து தங்கினர். உஞ்ச விருத்தியாக (யாசகம் செய்தல்) கிடைக்கும் அரிசியைச் சமைத்து பகவானுக்கு நைவேத்யம் செய்து உண்டார். பஜனை செய்ய ஒருநாளும் தவறியதில்லை. ஒருமுறை, பிருந்தாவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. மன்னர்கள், செல்வந்தர்கள் பட்டு பீதாம்பரங்களை கிருஷ்ணருக்கு காணிக்கையாக அளித்தனர். திரிபுரதாசர், ஒரு பட்டு வேட்டியை பகவானுக்கு கொடுக்க விரும்பினார். ஆனால், கையில் பணமில்லை. அவரது விருப்பத்தை அறிந்த மனைவி, சுவாமி! எனக்கும் இந்த காணிக்கையை அளிக்க விருப்பம் தான் என்றாலும், நம்மால் இதைச் செய்ய முடியுமா?, என்றார் வருத்தத்துடன். அமைச்சராக இருந்த போது, கிருஷ்ணருக்கு ஆயிரம் பட்டு வேட்டியை வாங்கி கொடுத்திருக்கலாமே!, என்று வருந்தினார் தாசர். அவரது மனைவி அவரிடம், சுவாமி! ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஒரு நூல் வேட்டியாவது வாங்கிக் கொடுப்போம். அதை அவர் ஏற்காமலா போய்விடுவார், என்றாள்.
நீ சொல்வது சரிதான்! ஏழை நண்பர் குசேலர் கொடுத்த அவலைக் கூட அன்புடன் ஏற்ற கருணைக்கடல் அவன். அதனால், நாம் கொடுக்கும் நூல்வேட்டியையும் விருப்பமாக ஏற்பான், என்று நம்பிக்கையோடு சொன்னார். பணத்திற்கு எங்கே போவது என்று யோசிக்காதீர்கள். பகவானுக்கு நைவேத்யம் வைக்கும் வெண்கலப் பாத்திரம் வீட்டில் இருக்கிறது. அதை விற்று ஒரு வேட்டி இப்போதே வாங்கி வாருங்கள்! நாளை முதல் நைவேத்யத்தை மண்சட்டியில் வைத்துக் கொள்ளலாம், என்று மனைவி யோசனையும் சொன்னார். வெண்கலப் பாத்திரத்தைக் கொண்டுவா! இப்போதே கடைத்தெருவுக்குச் சென்று வருகிறேன், என்று புறப்பட்டார். பாத்திரத்தை விற்ற பணத்தில் நூல்வேட்டி வாங்கினார். தம்பதியராக கிருஷ்ணரைத் தரிசிக்க கிளம்பினர். கிருஷ்ணஜெயந்தி என்பதால், கோயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மூலவர் பட்டு பீதாம்பரதாரியாய் காட்சியளித்தார். அவரின் திருமேனியில் ஆபரணங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. அர்ச்சகரிடம்,சுவாமி! அடியேனின் விருப்பத்தை ஏற்று அருளுங்கள். இந்த நூல் வேட்டியை பகவானுக்குச் சாத்தவேண்டும், என்று தயக்கத்துடன் சொன்னார். உமக்கு என்ன பைத்தியமா? ஜெயந்திக்காக ஆயிரமாயிரம் பட்டுவேட்டிகள் கோயிலில் குவிந்துள்ளன. அதையே எங்களால் சாத்தமுடியவில்லை. வெறும் நூல்வேட்டிக்கு என்ன அவசரம்?, என்று அலட்சியப்படுத்தினார். அதன்பின், அர்ச்சகர், கிருஷ்ணருக்கு அங்கு குவிந்திருந்த வெண்பட்டு வேட்டி ஒன்றைச் சாத்த முயற்சித்தார். மூலவரின் இடுப்பில் எந்த வஸ்திரமும் நிற்காமல் நழுவி விழத் தொடங்கியது. அதோடு, திருமேனி குளிரில் நடுங்குவது போல அர்ச்சகரின் கண்ணுக்குத் தெரிந்ததது. பரம பக்தனாகிய திரிபுரதாசர் கொடுத்த வேட்டியைப் போர்த்தினால் எம் நடுக்கம் தீரும், என்று அசரீரி ஒலித்தது. இதைக் கேட்ட அர்ச்சகர் மெய் சிலிர்த்துப் போனார். தாசரே! என் பிழையை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பக்தியின் ஆழத்தை உணராமல் தவறிழைத்து விட்டேன், என்று வருந்திச் சொன்னார். தாசர் அளித்த நூல்வேட்டியை மூலவருக்கு அணிவித்ததும் பகவானின் நடுக்கம் நீங்கியது. தாசரின் புகழ் பரவியது. அவரும், அவருடைய மனைவியும் பிருந்தாவனம் கோயிலி÷,யே தங்கி சேவையில் ஈடுபட்டனர். நீண்ட காலம் அங்கு வாழ்ந்து, அப்பெருமானின் திருவடியில் கலந்தனர்.