பதிவு செய்த நாள்
18
நவ
2023
06:11
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது.
முருகனின் ஏழாம் படைவீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 14ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் தினசரி காலையும், மாலையும் யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், திருவீதியுலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின், முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை, 5:15 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தங்ககவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 3:30 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி சூரசம்காரத்திற்காக, பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து, வீரபாகு, குதிரை வாகனத்தில் வந்து, தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் தூது சென்றார். அதன்பின், சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளி, பானுகோபன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், சூரபத்மனை வதம் செய்தார். சுப்பிரமணிய சுவாமிக்கு, வெற்றிவாகை சூடும் நிகழ்ச்சி நடந்தது. சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, வீரபாகு ஆகியோருக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின், சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக, தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, அரோகரா அரோகரா என எழுப்பிய கோஷம், மருதமலை முழுவதும் எதிரொலித்தது. முன்னதாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மலைப்பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை காலை, 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.