கார்த்திகை அமாவாசையில் கிணற்றில் பொங்கிய கங்கை நீர்; புனித நீராடி பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2023 11:12
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதல் கங்கை பொங்கி வரும் ஐதீகம் கொண்ட புனித கிணற்றில் இருந்து நீர் இறைத்து தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் புனித நீராடினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீ பகவந்நாம போதேந்த்திர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள், ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் ஆகியோர் சாஸ்திரங்கள், வேதங்கள் குறித்து விவாதித்த தலம். இத்தலத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீதர அய்யாவாள் மகான் வாழ்ந்த காலத்தில் ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தில் அவரது தந்தைக்கு திதி கொடுக்க ஏற்பாடு நடந்து வந்த நிலையில்,ஏழை ஒருவர் பசியால் துடித்தது காண பொறுக்காமல், திதிக்காக ஏற்பாடு செய்த உணவை அய்யவாள் வழங்கினார். திதிக்காக வந்த சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே அதற்காக தயாரித்த உணவை அளித்து விட்டதால் தோஷம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க வேண்டுமானால் நீ காசியில் போய் நீராடி வந்த பின்னரே திதி கொடுக்க இயலும் என கூறி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அய்யாவாள் திதி கொடுக்காமல் இருக்க முடியாதே என வருந்தி உடனடியாக சிவனிடம் கங்காஷ்டகம் எனும் ஸ்தோஸ்திரத்தை வாசிக்க, அவரது வீட்டு கிணற்றில் கங்கை பிரவாகமாக பொங்க தொடங்கியதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற ஸ்ரீ அய்யாவாளின் பெருமையை உலகுக்கு உணர்த்திய தினமான கார்த்திகை அமாவாசை தினத்தில் ஆண்டு தோறும் அய்யாவாள் வீட்டு கிணற்றில் கங்கை நீர் பிரவாகமாக பொங்கி வருவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் கார்த்திகை அமாவாசை தினமான இன்று அதிகாலை முதற்கொண்டு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்காண பக்தர்கள் வரிசையில் வந்து முதலில் காவிரியில் புனித நீராடி பின்னர் அய்யாவாள் மடத்தில் உள்ள விசேஷ கிணற்றில் புனித நீராடினார். இந்நிகழ்ச்சியையொட்டி ஸ்ரீதர அய்யாவாள் சுவாமிகள் விக்ரகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதற்கு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. நாளை 13ம் தேதி ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாளின் திருவீதியுலாவும் அதனை அடுத்து ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவமும் நடைபெற்று இவ்வாண்டிற்காண உற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.