பதிவு செய்த நாள்
18
டிச
2023
04:12
சென்னை: ‘‘பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. முதியவர், மாற்று திறனாளிகளுக்கு தனி வரிசை அமைக்கப்படுகிறது,’’ என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார். பின், பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு, இந்தாண்டு, 70,000 மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பாதுகாப்பு வசதிக்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும், 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு டி.பி.கோவில் தெரு வழியாக தனி வரிசை அமைக்கப்படுகிறது. சொர்க்க வாசல் திறப்பு அன்று அதிகாலை 2:30 மணிக்கு 1,500 பக்தர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், 850 நபர்கள் அனுமதிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை ஆறு மணி முதல் இரவு நடை மூடும் வரை பொது தரிசனம் தான். சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆறு சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிவறைகள், 20 இடங்களில் நிறுவப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்கு, 400 போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகிறது. அறநிலைத்துறை சார்பில் கூடுதல், இணை, துணை, உதவிக் கமிஷனர்கள், 150 அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை தரிசனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசவுகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும். அதையே காரணம் காட்டி கனக சபை தரிசனத்திற்கு தடை செய்வதை அறநிலையத்துறை அனுமதிக்காது. கோவில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அறநிலையத்துறை எண்ணம். தற்போது, திருவிழா காலங்களில் சிறப்பு கட்டணம் தரிசனம் ஆங்காங்கே ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டும் பார்த்தசாரதி கோவிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், கூடுதல் கமிஷனர் கவிதா, மயிலாப்பூர் காவல்துறை துணைக் கமிஷனர் ரஜத் சதுர்வேதி, மாநகராட்சி மண்டல அலுவலர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.