நீர், நெருப்பு, காற்று, விண், மண் என்று பஞ்சபூதங்களால் இவ்வுலகம் இயங்குகிறது. கடலில் எப்போதும் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கிறது. நெருப்பு தன் ஜுவாலையான நாக்கை சுழற்றி எரிகிறது. காற்று தென்றலாய், புயலாய் வலம் வருகிறது. வானம் இடியாய், மின்னலாய், மழையாய் வர்ணஜாலம் செய்கிறது. பூமிப்பந்து தங்கு தடை இல்லாமல் சூரியனைச் சுற்றி வந்து இரவையும், பகலையும் உண்டாக்குகிறது. இந்த பஞ்சபூதங்களால் தான் உலக இயக்கமே நடக்கிறது. இந்த இயக்கத்திற்கு ஆதார சுருதியாய் இருப்பது சிவபெருமானின் திருநடனம் தான். ஈசன் அசைந்தால் உலகமே அசைகிறது. அவன் அசைவை நிறுத்தி விட்டால் சிறிய அணு கூட அசையும் சக்தியை இழந்து விடும். இதைத்தான் ‘அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது என்பர். மனிதன் கருவில் இருக்கும்போதே இதயத்தின் இயக்கம் துவங்கி விடுகிறது. எவ்வளவு காலம் வாழ்கிறானோ அதுவரை இதயத்தின் வேலை தொடர்கிறது. ஒருகணப்பொழுதும் அது தன் இயக்கத்தை நிறுத்துவதில்லை. நடராஜப்பெருமானும் இவ்வுலகத்தின் மூச்சாக இருந்து எப்போதும் நடம் செய்து இவ்வுலகத்தின் இதயகமலமாய்த் திகழ்கிறார். அவரது ஆட்டம் நின்றுவிட்டால், உலகம் அழிந்து போகும்.