பதிவு செய்த நாள்
25
டிச
2023
05:12
சிதம்பரத்தில் வாழ்ந்த அருளாளர்களில் மறை ஞானசம்பந்தரும், உமாபதி சிவமும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவரும் சந்தானக்குரவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். குருசிஷ்யராக வாழ்ந்த இவ்விருவரும் சந்தித்த விதம் சுவாரஸ்யமானது. தில்லைவாழ் அந்தணரான உமாபதிசிவம் ஒருநாள் நடராஜருக்குப் பகல்நேர பூஜையை முடித்துவிட்டு, பல்லக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
பல்லக்கின் முன் ஒருவன் தீவட்டியைப் பிடித்துச் சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் நின்றமறை ஞானசம்பந்தர், பல்லக்கில் செல்லும் உமாபதி சிவத்தைக் கண்டார். பகல்நேரத்தில் சூரியன் இருக்க, ஏன் தீவட்டியோடு செல்ல வேண்டும் என்ற பொருளில், “பட்ட மரத்தில் பகல் குருடு என்று உமாபதிசிவத்துக்கு கேட்கும்படியாக உரக்கச் சப்தமிட்டார்.
இதைக் கேட்ட உமாபதிசிவத்துக்கு சுருக்கென்றது. பல்லக்கில் இருந்து குதித்து, மறைஞானசம்பந்தரை நோக்கி ஓடினார். எப்படியாவது அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உமாபதி சிவத்திற்குத் தோன்றியது. உமாபதி சிவத்திடம் பிடிகொடுக்காமல் ஓடிய மறை ஞானசம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டார். அவர்கள், அவரது கைகளில் ‘சிவப்பிரசாதம் என்று சொல்லி கூழை ஊற்றினர். அவரும் ‘சிவப்பிரசாதம் என்று சொல்லி குடிக்கத் தொடங்கினார். இதற்குள் உமாபதி சிவம் ஓடிவந்து, மறை ஞானசம்பந்தரின் கைகளில் வழிந்த கூழைக் ‘குருபிரசாதம் என்று சொல்லிக் குடித்தார். அதுமுதல் மறை ஞானசம்பந்தருக்கு உமாபதி சிவம் சீடராக மாறினார். உமாபதிசிவமே சைவசிந்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் ‘சித்தாந்த அட்டகம் என்னும் எட்டுச் சாத்திரங்களை எழுதிய பெருமை உடையவர் ஆவார்.
உணர்வற்ற நிலையில் பாதுகாப்பவர்: சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதமான கோலங்கள் உண்டு. மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார். தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப் போக்குகிறார். மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும். இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும். அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர்ஆடுகிறார். இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு. இந்நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம். அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே ‘மறைத்தல் தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.