பதிவு செய்த நாள்
05
ஜன
2024
11:01
மேட்டுப்பாளையம்; காரமடை ரோடு சிவன்புரத்தில் ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐயப்ப சேவா சமுதியின் 64 வது ஆண்டு விழா மற்றும் 33 வது ஆண்டு மண்டல மகோற்சவ திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் நவம்பர் மாதம் 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுற்று விளக்கு, நிறைமாலை, புஷ்பாபிஷேகம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிலையில் 33ம் ஆண்டு மண்டல நிகழ்ச்சிகள் ஸ்ரீ மாதேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கொடியேற்றம் , சர்ப்ப பலி பூஜை, ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம் தாயம்பாக, பள்ளி வேட்டை, உஷ பூஜை, ஆறாட்டு, கலசாபிஷேகம், அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நேற்று மாலை 6 மணிக்கு மைதானம் மகாமாரியம்மன் கோவிலில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சாமி ஊர்வலம் புறப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் கே .வி. அச்சுதன்குட்டி தலைமையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கேரள ரிஜிஸ் ,ஜிதின் ஆகியோர் குழுவினரின் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பஞ்சவாத்தியங்கள் முழங்க ஐயப்ப பக்தர்களின் சரண கோஷத்துடன் ஐயப்ப சாமி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணிக்கு கோவிலை அடைந்தது. தொடர்ந்து வாண வேடிக்கை, மகா தீபாராதனை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி ஊர்வலத்தையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.