மேலுார் சிவன் கோயிலில் தொந்தரவு ; வானரத்தைப் பிடித்து வனத்தில் விடுங்க.. பக்தர்கள் குமுறல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2024 03:01
மேலுார்; மேலுார், சிவன் கோயிலில் வானரங்கள் (குரங்கு) தொந்தரவு அதிகமாக இருப்பதால் பக்தர்கள் சுவாமி கும்பிட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலூரில், ஆங்கிலேயர் காலத்திய அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமையான கல்யாணசுந்தரேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் தாலுகா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முகூர்த்த தினங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இக் கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.
பக்தர்கள் கூறியதாவது : இக்கோயிலில் திருமணம் செய்பவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதால் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும். கோயிலில் வானரங்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் பக்தர்கள் அச்சத்துடனே வருகின்றனர். தவிர பக்தர்கள் பூஜைக்கு கொண்டு வரும் பழங்கள் மற்றும் தேங்காயை பறிக்கிறது. தடுப்பவர்களை உர்ர் என்ற சத்தத்துடன் விரட்டுகிறது. மேலும் சிறுவர்களை விரட்டி கடிக்கிறது. கண்மூடி சுவாமி கும்பிடும் போது பூஜை பொருட்களை எடுத்து செல்கிறது. மன அமைதிக்காக கோயிலுக்கு வந்தால் வானரங்கள் தொந்தரவால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால் வனத்துறை அதிகாரிகள் வானரத்தை பிடித்து வனத்தில் விட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.