ராவணனால் அல்லல்படுகிறோம் என தேவர்கள் அனைவரும் திருமாலிடம் முறையிட்டனர். ‘‘தேவர்களே! நான் பூமியில் ராமனாகப் பிறந்து பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழிப்பேன். கவலை வேண்டாம்’’ என்றார். சொன்னபடியே வாக்குறுதியை நிறைவேற்றினார். அவர் வாழ்நாளின் கடைசி நாள் வந்தது. அயோத்தி அரண்மனைக்கு வந்து ராமனைச் சந்தித்தான் எமதர்மன். ‘‘ஐயனே! இன்றோடு தங்கள் ஆயுள் முடிகிறது. வானுலகம் கிளம்பலாமா?’’ என்றான். மறு பேச்சில்லாமல் கிளம்பினார் உத்தம புருஷரான ராமர். ராமன் நினைத்திருந்தால் தன் ஆயுளை எவ்வளவு காலத்திற்கும் நீட்டியிருக்கலாம். ஆனால் அவர் சத்தியத்தை காப்பாற்றினார். சத்தியம் சத்தியத்தை காப்பாற்றுவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?