ஸ்ரீரங்கம்; அவதாரத் திருநாளை முன்னிட்டு, இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கூரத்தாழ்வார் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருவரங்கத்தில் அரங்கனின் அடியாராகத் திகழ்ந்தவர், உத்தம நம்பி. அவர் தமது லட்சுமி காவியத்தில், ஸ்ரீமத் ராமானுஜரின் முக்கியச் சீடர்களுள் ஒருவராக கூரத்தாழ்வாரைப் பற்றி மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். ராமானுஜரின் அத்யந்த சீடரும், குருவான ராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தனது கண்களையே இழந்து குருவைக் காப்பாற்றியவர், கூரத்தாழ்வார். ஆசார்ய பக்தியும் திருமாலிடம் பக்தியும் அடியார்களிடம் பக்தியும் வறியவர்களின் துயர் துடைக்கும் பண்பும் ராமானுஜரின் சித்தாந்தத்தைப் பரப்புவதில் பேரானந்தமும் கொண்டு வாழ்ந்த கூரத்தாழ்வாரை அவரது திருநட்சத்திர தினமான இன்று (தை ஹஸ்த நட்சத்திர தினம்) சென்று வழிபடுவோர், அவரது கடாக்ஷத்தால் அனைத்து வளமும் நலமும் பெறுவர் என்பது நிச்சயம். இன்று அவதாரத் திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வார் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.