முத்தாரம்மன் கோயிலில் செவ்வரளி செடியில் முருங்ககைக்காய்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2012 10:10
விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரம் அருகே கீழசிவந்திபுரம் முத்தாரம்மன் கோயிலில் உள்ள செவ்வரளி செடியில் முருங்கைக்காய் போன்று காய்கள் காய்த்து இருப்பது பக்தர்கள் இடையே பரவசத்தை ஏற்படுத்தியது. கீழசிவந்திபுரத்தில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நவராத்திரி கொழுமண்டல அமைப்பாளராகவும், கோயிலில் முக்கிய பிரமுகராகவும் குருஜி சிவசுப்பிரமணியன் இருந்து வருகிறார். இவரது கனவில் சுமார் ஒருமாதத்திற்கு முன்பு ஒரு பெண் தோன்றி கோயிலில் கொலு வைக்கும் இடத்திற்கு முன் தெப்பக்குளம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கூறினாராம். இதையடுத்து கோயிலில் கொலு வைத்த இடத்திற்கு முன் சிறிய தெப்பக்குளம் அமைத்துள்ளார். இந்நிலையில் நவராத்திரி விழாவின் 9வது நாளான நேற்று முன்தினம் இரவு இக்கோயில் பூசாரி சொரிமுத்துவின் கனவில் பெண் ஒருத்தி தோன்றி கோயிலில் நாளை அதிசயம் ஒன்று நடக்க இருக்கிறது என்று கூறினாராம். இதையடுத்து கோயிலுக்கு வந்த பூசாரி பார்த்தபோது கோயிலில் உள்ள செவ்வரளி செடியில் முருங்கைக்காய் போன்ற வடிவில் சுமார் 15 சிறிய காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார். இந்த விஷயம் ஊருக்குள் மெல்ல மெல்ல பரவியது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெண்களும், ஆண்களும் கோயிலுக்கு வந்து செவ்வரளி செடியில் காய்த்துள்ள முருங்கைக்காய் போன்ற காயை பார்த்து சென்றனர்.