பதிவு செய்த நாள்
05
பிப்
2024
12:02
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு, கடந்த 1982ம் ஆண்டு, காஞ்சி மகாப்பெரியவர், மங்களம் என்ற யானையை வழங்கினார். தற்போது 56 வயதாகும் யானை மங்களத்திற்கு, மிளகு, சீரகம், நெய், பனை வெல்லம் கலந்த எட்டு கிலோ எடையுள்ள சாதம், 250 கிலோ எடையுள்ள ஆல, அரசு, அத்தி இலைகள், சோளத்தட்டை, தென்னை மட்டைகள் போன்ற இயற்கை உணவுகளும், வைட்டமின் சத்துக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது. யானை மங்களம் மிகவும் சுறுசுறுப்புடன், அதனை பராமரிக்கும் யானை பாகன் அசோக் என்பவருடன் பல்வேறு குறும்பு தனம் செய்யும வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால், கும்பகோணம் வரும் பக்தர்கள் மங்களம் யானையை பார்க்க தவறுவது இல்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 38 கோவில் யானைகளை டில்லியை சேர்ந்த லோக் தந்த்ரா அவுர் ஜந்தா என் தன்னார்வ அமைப்பினர் ஆய்வு செய்து, சிறந்த யானையாக மங்களம் யானையை தேர்வு செய்தனர். இதற்கு ‘ஆன் ஆக்டிவ் எலிபன்ட்’ என்ற விருதை நேற்று அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணக்குமார் மற்றும் யானை பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிடம் விருதுகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கி பாராட்டினார்.
இது குறித்து யானை பாகன் அசோக் கூறியதாவது; நான் பள்ளிக்குச் செல்லும்போது இருந்தே இந்த யானையுடன் பழகி வருகிறேன். பல நாட்கள் பள்ளிக்குக் கூட செல்லாமல் யானையை நீராட வைப்பது, அலங்காரம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தேன். இதனால், யானையும் என்னுடன் பாசமாக பழகத் தொடங்கியது. என்னை தனது கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு கொஞ்சும். அப்போது, நான் அதன் கால்களைத் தடவி விட்டால் தான், அந்த இடத்தை விட்டு நகரும். நான் வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தால், என்னை உச்சிமுகர்ந்து, பாசத்தை வெளிக்காட்டும். மாநிலத்தில் உள்ள கோவில் யானைகளில் மிக வயதான யானை என்றாலும், சிறு குழந்தை போல் சுறுசுறுப்பாகச் செயல்படும் என்றார்.