தை அமாவாசை; புனித தீர்த்தங்களில் குவிந்த பக்தர்கள்.. தர்ப்பணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2024 10:02
மயிலாடுதுறை; பூம்புகார் உள்ளிட்ட புனித தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும். இதில் தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது. உத்திராயண புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கூறப்படுகிறது. இந்நாளில் புனிதமான கடற்கரைகள், புண்ணிய நதிக்கரை, தீர்த்தங்களின் நீராடி வேத விற்பனர்கள் வழிகாட்டுதலுடன் இறந்தவர் வழிபாட்டிற்குரிய பூஜைகள் செய்வது போற்றப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை புனித புண்ணிய நதிக்கரையான காவிரி துலா கட்டம், பூம்புகார் காவிரி சங்கமத்துறை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ருத்ரபாதம் ஆகிய இடங்கள் பிதுர் பூஜை செய்வதற்குரிய தலங்களாக போற்றப்படுகின்றன. தை அமாவாசை தினமான இன்று பூம்புகார் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கடற்கரை மற்றும் காவிரி சங்கமத் துறையில் புனித நீராடி வேத விற்பனர்கள் வழிகாட்டுதலுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதுபோல சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள அக்னி சூரிய சந்திர தீர்த்தங்களில் ஏராளமானோர் புனித நீராடி ருத்ரபாதம் அமைந்துள்ள இடத்தில் வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலுடன் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர் கடற்கரைகள் மற்றும் புனித தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தவர்கள் பின்னர் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு சென்று விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு நடத்தினர்.