பதிவு செய்த நாள்
14
பிப்
2024
04:02
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதை போல ஒவ்வொரு ஆண்டும் மாசிமகம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு மாசிமக விழா வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மகாமக குளத்தில் நீராட உள்ளனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம், வருவாய்துறையினர் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வது வழக்கம்.
இந்நிலையில், மகாமகத்திற்கு தொடர்புடைய 12 சிவன் கோவில்களில், மாசிமக திருவிழாவிற்கான கொடியேற்றம் நாளை(15ம் தேதி) நடக்கிறது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும், மாசிமகத்தை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில், கல்லுாரி மாணவ-மாணவிகள் துாய்மை பணியில் ஈடுபட்டனர். அதே போல் மகாமக குளத்தின் 4 கரைகளிலும், மாநராட்சி சார்பில் துாய்மை பணியாளர்கள், துாய்மை செய்து வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அகில பாரத ஹிந்து மகா சபா, ஆலய பிரிவின் மாநில தலைவர் நிரஞ்சன் மனு அளித்தார். மனுவில், மாசி மக பெருவிழாவை முன்னிட்டு, வரக்கூடிய பக்தர்கள் மகாமக குளக்கரையில் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதிகள் செய்ய வேண்டும். மகாமக குளத்தில் உள்ள தண்ணீரை துாய்மை செய்ய வேண்டும். மகாமக குளக்கரையில், வரக்கூடிய பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக கழிப்பறை வசதிகள், மருத்துவ முகாம், அவசர சிகிச்சை முகாம் அமைக்க வேண்டும். மாசிமகத் தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும். வரும் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள மகாமக பெருவிழா தேசிய திருவிழாவாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.