வணிகர் ஒருவர் மகள் வீட்டிற்கு செல்லும் வழியில் தேவாலயம் ஒன்றில் வழிபடச் சென்றார். அங்கு தன்னிடம் இருந்த பணப்பையை தவற விட்டார். அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்தார். அதில் பணமும், தங்க நாணயம், நெக்லஸ் இருப்பதைக் கண்டார். அதை பத்திரப்படுத்தி கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். வாசலில் ‘பணப்பையைத் தொலைத்தவர்கள் அணுகலாம்’ என அறிவிப்பு ஒன்றை வைத்தார். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த வணிகரின் கண்ணில் அந்த அறிவிப்பு பட்டது. அடையாளம் சொல்லி பையை பெற்ற வணிகர் அதில் பணம், தங்க நாணயம், நெக்லசும் அப்படியே இருந்தது. ஆசிரியரின் நேர்மையைக் கண்ட வணிகர் தங்க நாணயத்தை பரிசாகக் கொடுத்தார். வாங்க மறுத்தாலும் வலுக்கட்டாயமாக திணித்து விட்டு புறப்பட்டார் வணிகர். அவரைப் பின்தொடர்ந்த ஆசிரியர், ‘திருடன் திருடன் காப்பாற்றுங்கள்’ எனக் கத்தினார். அங்கிருந்தோர் வணிகரை சுற்றி வளைத்தனர். நடந்ததை சொல்லிய ஆசிரியர், ‘என் நேர்மையை இவர் திருடிச் செல்கிறார்’ என அவர்களுக்கு விளக்கம் அளித்தார். நாநயத்திலும் நாணயத்திலும் நேர்மை வேண்டும் என்கிறது பைபிள்.