ஸ்ரீரங்கத்திற்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக்கோஷ்டியூர். மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்கு தான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு. பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் என்பது திருநாமம். பொதுவாக கோயில்களில் உற்ஸவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு. மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமியநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும்.