விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ஆனால் தன்னைத் தானே பூஜை செய்து சிவன் வழிபட்ட தலம் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில். சுவாமி சிவலிங்க வடிவில் இங்கிருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவபார்வதி சிலைகள் உள்ளன. சிவபெருமானே மதுரையில் சுந்தரபாண்டியராக அரசாட்சி செய்கிறார். பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரையில் பாண்டிய மன்னராக ஆட்சியில் அமர்ந்த சிவன்(சொக்கநாதர்) பட்டாபிஷேகத்தின் போது தனக்குத் தானே பூஜை செய்தார். ஆண்டு தோறும் ஆவணி மூலநட்சத்திரத்தன்று இந்த சிவபூஜை நடக்கிறது.